நீர்கொழும்பில் மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் – முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது

 

நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒரு மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர், ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, குறித்த மாநகர சபை உறுப்பினர் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் கெப் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி ஓட்டுநர் வீதியை மறித்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அந்த சந்தர்ப்பத்தில் மாநகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த மாநகர சபை உறுப்பினர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.