களுவன்கேணி கடலில் தோணி கவிழ்ந்த விபத்து: காணாமல் போன இளம் மீனவர் சடலமாக மீட்பு

 

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பகுதியில் தோணி கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம், களுவன்கேணி வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்ததில் குறித்த இளம் மீனவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.