உச்சத்தைத் தொட்ட தங்க விலை: விற்பனை மற்றும் அடகு நடவடிக்கைகள் அதிகரிப்பு

 

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை மிகவேகமாக உயர்ந்து வரும் நிலையில், இலங்கையிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. 

இந்த விலை ஏற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில், பொதுமக்கள் தங்களது கைவசமுள்ள நகைகளையும் அடகு வைத்துள்ள பொருட்களையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நிலவும் பொருளாதார சூழலில், பலர் தங்களின் சேமிப்பில் உள்ள தங்கத்தை சந்தைக்குக் கொண்டு வருவதால், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் புழக்கம் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், வட்டி விகித அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான தங்க விலை காரணமாக, ஏற்கனவே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நகைகளை விற்பது அல்லது அடகு வைத்த நகைகள் மீது மேலதிகப் பணத்தைப் பெற்றுக்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.