ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது
கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இன்னொரு சந்தேக நபர், கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 44 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி காயமடைந்த நிலையில் கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குறித்த சந்தேக நபர், ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின் போது சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
.png)