இலங்கையின் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு வீதம் கவலைக்கிடமான வகையில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 3,28,400 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2,20,761 ஆக குறைந்துள்ளது. இது 33% வீழ்ச்சி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களில் பதிவாகியுள்ள பிறப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த அளவு என குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக, சமூகம், பொருளாதாரம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை அதிகாரிகள் கவலையுடன் பரிசீலித்து வருகின்றனர்.
அத்துடன், கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கமும், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியும் இணைந்து, திருமணங்களையும் கர்ப்பங்களையும் தாமதப்படுத்தியதன் விளைவாக, நாட்டில் பிறப்பு வீதம் மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
