இன்று வானில் சந்திரனை விட 7 சதவீதம் பெரிய சூப்பர் மூன்

பௌர்ணமி தினமான இன்று (06), வானில் "சூப்பர் மூன்" (Supermoon) காணப்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகம் (ACCIMT) தெரிவித்துள்ளது.

இது, வழக்கமாக காணப்படும் முழு சந்திரனைவிட சுமார் 7 சதவீதம் பெரியதும், மேலும் பிரகாசமானதுமாக இருக்கும்.

பௌர்ணமி தினங்களில் காணப்படும் சாதாரண முழு சந்திரங்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு காணப்படும் சந்திரன் பெரிதும் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரிவதால், இதனை "சூப்பர் மூன்" என அழைப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகே வந்த போதெல்லாம், வருடத்திற்கு பல முறை "சூப்பர் மூன்" நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

இந்தத் தோற்றம், சந்திரன் முழுமையாக தோன்றும் "முழு சந்திரன்" கட்டத்திலும், பௌர்ணமி தினத்திலும் நிகழக்கூடும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்போர், இன்று வானில் தோன்றும் சூப்பர் மூனின் தாக்கமாக வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை எதிர்நோக்க நேரிடக்கூடும்.  

அதேவேளை, இன்றிரவு பிரகாசமான முழு நிலவின் அருகில் சனி கிரகம் தென்படும் வாய்ப்பும் உள்ளதால், வானியலாளர்கள் மற்றும் வானில் ஆர்வம் கொண்டோருக்கு இது ஒரு அரியதொரு காணொளிப் பொழுதாக அமையக்கூடும்.  

பௌர்ணமி தினத்தில் நிகழும் இந்த சூப்பர் மூன், இயற்கையின் அபூர்வ நிகழ்வுகளை அனுபவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும்.