அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ், அரச ஊழியர்களின் சம்பளங்கள் மூன்று கட்டங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் முதற்கட்ட அதிகரிப்பு இந்த ஆண்டில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம் 2025ஆம் ஆண்டில் வழங்கப்படும் எனவும், இறுதி கட்டம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 60% முதல் 80% வரை அதிகரித்து, மூன்று கட்டங்களாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, முதல்கட்டமாக 30% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையிலிருந்து 30% முதல் 35% வரை, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்கும் நிலையில், சம்பள உயர்வு அரச சேவை, கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் உடனடியாக பொருந்தவேண்டும் என வரவு செலவுத்திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அரச செலவுகளில் பெரும் பகுதி, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுகளை உட்படுத்திய தொடர்ச்சியான செலவுகளுக்கே பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.