நாட்டு மக்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையை இலங்கை பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக, பொலிஸ் தலைமையகம் அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு, அவ்வகை மோசடிகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இணையம் மூலம் நடைபெறும் மோசடிகள், குறிப்பாக டெலிகிராம் (Telegram), வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பிற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் நாள்தோறும் பதிவாகி வருகின்றன.

இதில், மோசடிக்காரர்கள் தனிநபர்களை ஏமாற்றி, அவர்களது பயனர்பெயர், கடவுச்சொல் (Username/Password), QR குறியீடுகள் உள்ளிட்ட இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், இணையவழி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்து, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வைப்பிலிட வைப்பதன் மூலம் மோசடிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகியுள்ளது.

எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகளை தவிர்க்க பொதுமக்கள் உயர் மட்ட விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

அறியப்படாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் பகிரும் இணைய இணைப்புகள் (links) மற்றும் ஸ்கேன் குறியீடுகளை (QR codes) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  

அதேபோல், இணையத்தில் அறியப்படாத நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பகிர்வது, அல்லது உங்கள் சொந்த வங்கிக் கணக்கை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என்பதையும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள், OTP குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களை வெளி நபர்களுடன் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.  

அத்துடன், அறியப்படாத நபர்கள் வழங்கும் கைபேசி செயலிகளை (Mobile Applications) நிறுவும் போது மற்றும் இணைய இணைப்புகளை பயன்படுத்தும் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும்.  

மேலும், உங்கள் இலத்திரனியல் சாதனங்களின் இருப்பிட அனுமதியை (Location Permission) தேவையில்லாமல் வழங்குவதை தவிர்க்கவும், தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.