இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்போதைய எட்டு ஆண்டுகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கான முறையான நடைமுறையை உருவாக்க, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் போது, விண்ணப்பதாரர்களின் வயதும், உடல்நலத் தகுதியும் மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில், ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும்போது, அவற்றின் செல்லுபடியாகும் காலத்தை உகந்த கால எல்லைக்கு அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை என்றும், தற்போது ஒரு திட்டமாக மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

மேலும், இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டாலும், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இது பொருந்தாது என்றும், அவர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிற்கும் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு தேவையான தேசிய போக்குவரத்து மருத்துவ உடற்தகுதி சான்றிதழை அச்சிடுவதை நிறுத்தும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் கீழ், அந்த சான்றிதழ்களை நேரடியாக இணையவழி இலத்திரணியல் அமைப்பின் மூலம் மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த உடற்தகுதி சான்றிதழ்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் ரூ. 50 மில்லியன் வரை செலவிடுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.