வடக்கு மற்றும் கிழக்கில் நாளை கடும்மழை பெய்யும் வாய்ப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தற்போது பெய்து கொண்டிருக்கும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறை பீட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நேற்று (21) பிற்பகல் 1.00 மணியளவில் வெளியிடப்பட்டது.
மேலும், வங்காள விரிகுடாவில் கடந்த திங்கட்கிழமை உருவான தாழமுக்கம், தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து வருவதால், நாட்டின் மேகத்தன்மை மற்றும் மழை மூட்டத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம், நேற்று (21) மாலை அல்லது இன்று (22) அதிகாலை வடக்கு மாகாணத்துக்கு மிக அருகாமையில் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த பகுதியில் மழைவீழ்ச்சி மற்றும் காற்று வீச்சு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இரு மாகாணங்களிலும் வாழும் மக்கள் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.