வைத்தியசாலையில் 45 பாடசாலை மாணவர்கள் அனுமதி!

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் வழங்கப்பட்ட உணவை அடுத்து சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிய பின்னரே இந்த நிலைமை உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதையடுத்து, பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பக்கமுன பிராந்திய வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்து சென்றுள்ளனர்.  

அவர்களில் சிலர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை நிலைமை கவலைக்கிடமானதாக இல்லையெனவும், சிலர் தேவையான சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நிகழ்ச்சியின் போது அந்த உணவு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், உணவின் மாதிரிகள் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.