வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (01.10.2025) வெளியிட்டுள்ள தினசரி காலநிலை அறிக்கையில், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வானிலை பொதுவாக சீரானதாக காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், மேலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரை உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோர பகுதிகளை அண்டிய கடற்பரப்புகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வரைக்கும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வரையான கரையோரத்தை ஒட்டிய கடற்பரப்புகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலும் உள்ள கரையோரத்தை ஒட்டிய கடற்பரப்புகள், அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.