நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

ஷொப்பிங் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், வருகிற நவம்பர் 1 ஆம் திகதி முதல் அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (1) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுக்கின்றதால், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டமொன்றை உருவாக்க உத்தரவிடுமாறு கோரி, சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வான பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று (1) அழைக்கப்பட்டது.

மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களால் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றின் மீது வரி விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 2024 மார்ச் 28ஆம் திகதி உயர் நீதிமன்றில் இணக்கம் வழங்கியிருந்தனர்.

அந்த இணக்கத்தின் அடிப்படையில் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே தெரிவித்தார்.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

அதனடிப்படையில், சுற்றுச்சூழல் நீதி மையம் அந்த அறிவிப்புக்கு இணக்கம் வழங்கியதை முன்னிட்டு, வழக்கின் விசாரணையை முடித்ததாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.