தனியார் பேருந்து மற்றும் லொறி மோதி விபத்து - வைத்தியசாலையில் 20 பேர் அனுமதி
தனியார் பேருந்தொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கரவனெல்ல மற்றும் கித்துல்கலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கித்துல்கலையிலிருந்து அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு கைத்தொழில் நிறுவனத்துக்குச் செல்லும் ஊழியர்களை ஏற்றிச் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று (15) புதன்கிழமை காலை நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, எதிர்திசையில் கடும் வேகத்தில் வந்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகள் செய்துள்ளன.
லொறியின் சாரதி நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது எட்டியாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.