பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, கண்டி மாவட்ட செயலகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மஹையாவ பூர்னவத்த மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், 2025 மே 31ஆம் திகதி ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வின்போது, அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது உகந்ததாகவும் தேவையானதாகவும் இருக்கின்றது எனக் காணப்பட்டது.

அந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதேச செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025/2026 கல்வி ஆண்டுக்கான பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை, 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சை 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026 ஆகஸ்ட் 9ஆம் திகதியன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.