கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள், உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும், ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், ஒரு நாள் சேவையின் கீழ் தினசரி 1,500 முதல் 2,000 வரை கடவுச்சீட்டுகள், மேலும், வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், சேவையின் வேகமான நடைமுறை மற்றும் பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு, கடவுச்சீட்டு சேவைகளை மேலும் தரமிகு வகையில் முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

கடவுச்சீட்டை பெற, ஒரு நாள் சேவைக்கு ரூ.20,000 மற்றும் வழக்கமான சேவைக்கு ரூ.10,000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தகவல் தெளிவின்மை இருந்தால், அதன் சரிபார்ப்பு நடவடிக்கைகள் காரணமாக வழக்கத்திற்கு மாறாக கால தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது, மக்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதழும் தெளிவாக உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.  

இவை தெளிவாக இருக்காவிட்டால், கடவுச்சீட்டு பெறும் செயல்முறையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு நாள் சேவையிலும் வழக்கமான சேவையிலும், ஒரு நாளுக்கு சராசரியாக 4,000 முதல் 5,000 வரை தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.