இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் கிடைத்துள்ள அனுமதி!

2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசாங்கத்திடம் அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு, சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இந்த தமிழர்கள், தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல முகாம்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழவேண்டும் எனத் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த இலங்கைத் தமிழர்கள், 2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக அரசிடம் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இந்தியாவில் சட்டபூர்வமாக தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்கள் இனிமேல் இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். சமீபத்தில் நடைமுறைக்கு வந்த குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தில் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும், அவர்களுக்கு மத்திய அரசு விலக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பல இலங்கைத் தமிழர்கள் உலக நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அந்தந்த நாடுகளில் சிலர் தற்போது குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன்படி, இந்தியாவிற்குள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது ஆவணங்களின்றி நுழைவதும், அங்கிருந்து அனுமதி இன்றி தங்குவதும் குற்றமாகக் கருதப்படும். 

இத்தகைய குற்றத்திற்கு ரூ.5 இலட்சம் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.

நடப்புக்குவரும் புதிய குடிநுழைவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், நேப்பாளம் மற்றும் பூட்டானில் இருந்து நிலம் அல்லது வான்வழியாக இந்தியாவுக்குள் பயணிக்கும் அந்த நாடுகளின் குடிமக்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கடவுச்சீட்டு அல்லது விசா அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நியமனச் சலுகை, சீனா, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானிலிருந்து பயணிக்கும் நேப்பாளம் மற்றும் பூட்டான் குடிமக்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.