இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம்!
நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வான்களுக்கு விரைவில் புதிய விதிமுறைகள் அமுலில் வரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், குறித்த விதிமுறைகள் ஆறு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி, 100 கி.மீ.க்கும் மேல் பயணித்து மாகாண எல்லைகளை கடக்கும் பேருந்துகள் மற்றும் வான்கள், பயணத்திற்கு முன் வாகன ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“இவை பெரிய அளவிலான சோதனைகள் அல்ல. ஆனால், சில்லுகள், கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகளின் நிலை போன்ற முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட எளிய ஆய்வுகளே மேற்கொள்ளப்படும்,” என அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“மாகாண எல்லைகளை கடந்துச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் வான்கள், பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த ஆய்வைச் செய்து, தேவையான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய சட்டம் கீழ் இது பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஓய்வு சுற்றுலா உள்ளிட்ட நீண்ட தூர பயணங்களில் பயன்படுத்தப்படும் அத்தகைய வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள், பயணத்திற்கு முன் வாகனம் தேவையான பாதுகாப்பு ஆய்வுகளுக்குட்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதற்கு, தேவையான சட்டரீதியான விதிமுறைகளின் கீழேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதுவே பாதுகாப்பான போக்குவரத்துக்கான ஒரே வழியெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.