நாட்டில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்தல் தொடர்பாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அதன்படி, சம்பந்தப்பட்ட வரி தொகைகளை செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கட்டாயமாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த அறிவுறுத்தல், தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வரி செலுத்துவோர், கடைசி நாளை முன்னிட்டு தங்களுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையை, இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலுமானோ அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலம் ஆன்லைனில் செலுத்துவதனூடாகவும் கட்டணம் செலுத்த முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செலுத்துதலும், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் செலுத்தப்பட்டாலும், தாமதமாகச் செலுத்தப்பட்டதாகவே கருதப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றுக்காக விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் தள்ளுபடி செய்யப்படவோ, குறைக்கப்படவோ மாட்டாது எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.