இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (16.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

அதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதேபோல், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், சில பகுதிகளில் தற்காலிகமாக அதிகரித்துவீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.