கந்தளாய் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள நிலையில் நூலகம் - பொதுமக்கள் கவலை
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பொது நூலகத்தில் காடு வளர்ந்து, கரையான புத்தகங்கள் அழிந்துபோய், சுவர்கள் வெடித்து சேதமடைந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் தவிசாளர் பாரூக் அவர்களின் முயற்சியினால் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஏலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில், நூலகம் கல்விக்கான முக்கிய ஆதாரமாக விளங்கியிருந்தது.
இருப்பினும், பேராறு சனசமூக நிலையம் நூலகத்தை ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை இயங்கச் செய்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நூலகம் மூடப்பட்டு விட்டது.
"கந்தளாய் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் பாடசாலைகள் இருந்தும், மாணவர்களுக்கான ஒரு பொது நூலகம் கூட இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது."
பேராறு நூலகத்தை மீண்டும் சீரமைத்து, நிரந்தர ஊழியர் நியமித்து, கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு திறந்துவைக்க வேண்டும் என்று பேராறு மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.