நாட்டில் தினசரி சுமார் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் – தேசிய மனநல நிறுவனம் தகவல்
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகுகின்றன என்று தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்த நிலைமை குறித்து கவலையுடன் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "1996ஆம் ஆண்டில், உயிர்மாய்ப்புச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகளவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அந்த ஆண்டில், ஒரு இலட்சம் மக்களுக்கு 47 பேர் உயிரை மாய்த்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, அதனை தொடர்ந்து அந்த விகிதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது," என அவர் தெரிவித்தார்.
இப்போது, உயிர்மாய்ப்புச் சம்பவங்களின் விகிதம் ஒரு இலட்சம் மக்களுக்கு 15 ஆக குறைந்துள்ளதாகவும், வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர் எனவும், தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த விகிதம் அதிகரிக்கவில்லை. நாளொன்றுக்கு சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நடக்கின்றன.
பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் இடம்பெறுகின்றன. உண்மையில், மேலும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. உயிர்மாய்ப்புச் சம்பவங்களில் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும், இப்போது இந்த வகையான சம்பவங்கள் குறைவாக ஊடகங்களின் கவனத்திற்கு வருகிறது.
ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களை கடந்த காலங்களைப் போல பெரிதாக வெளியிடவில்லை. இது, சமூக மனநலத்திற்கு சாதகமாக அமைந்துள்ள ஒரு முக்கிய முன்னேற்றம்" என அவர் குறிப்பிட்டார்.
