நாட்டில் நிலவும் ஆசிரிய வெற்றிடம் தொடர்பில் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தகவல்
நாட்டின் பாடசாலைகளில் மொத்தமாக 39,267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (05) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த 2023 ஜனவரி 17ஆம் திகதி அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், மேலதிக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டு, இன்றுவரை பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பாராளுமன்றில் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 39,267 ஆசிரியர் பதவிகள் வெற்றிடமாக உள்ளன. கல்விச் சுற்றறிக்கையின் அடிப்படையில், 2,604 வெற்றிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டிற்கான டிப்ளோமா முடித்தவர்களுக்கான நியமனங்கள், மாகாண பாடசாலைகளுக்கு 2025 மே 2ஆம் திகதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் பாடசாலைகளுக்கு 345 நியமனங்கள், தேசிய பாடசாலைகளுக்கு 968 நியமனங்கள், மற்றும் ஆங்கில பாடசாலைகளுக்கு 381 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் சிங்களப் பாடசாலைகளில் 2,281, தமிழ் மொழிப் பாடசாலைகளில் 1,401 மற்றும் ஆங்கில மொழி பாடசாலைகளுக்கு 679 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதிநிதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.