இலங்கையை அச்சுறுத்தும் சீரற்ற காலநிலை - பேராசிரியர் பிரதீபராஜாவின் 'பகீர்' எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில், இலங்கைக்குக் கிழக்கே இன்று ஒரு புதிய காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது அடுத்த இரு தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (தாழமுக்கம்) வலுப்பெறக்கூடும் என்பதால், நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை:
இந்தக் காலநிலை மாற்றம் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் (பெப்ரவரி 22 வரை) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், ஆறுகளின் கரையோரங்கள், குளங்களின் வான் பாயும் பகுதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களின் நிலை:
வடக்கு மாகாணம்: இன்று முதல் மழைப்பொழிவு அதிகரித்து, சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ: இம்மாவாணங்களில் மிதமானது முதல் கனமழை வரையிலான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. மலையகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடல்சார் எச்சரிக்கை:
இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்குக் கடற்பகுதிகள் சீற்றமாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெற்செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்ட கவலை:
வழமையாக பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் விலக வேண்டிய வடகீழ் பருவக்காற்று, இம்முறை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனப் பேராசிரியர் கணித்துள்ளார். காலநிலை மாற்றத்திற்கும் விவசாயப் பருவத்திற்கும் இடையிலான ஒத்திசைவு இல்லாமையினால் நெற்செய்கையில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்று வழிமுறைகளைத் துறைசார் வல்லுநர்கள் உடனடியாக ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags:
இலங்கை
