மாத்தளை அருகே இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மையம் நிறுவ திட்டம்

 

மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுங்கங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகே, இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மற்றும் பராமரிப்பு மையத்தை (Monkey Detention Centre) நிறுவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (DWC) இடத்தை தேர்வு செய்துள்ளது.

இந்த மையம் 150 ஏக்கர் பரப்பளவில் செயல்படவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழு ஒப்புதல்

மையத்தில் குரங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரைக்கேற்ப, மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழு இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.

மாநகர பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை தரும் குரங்கு கூட்டங்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு, இந்த மையத்திற்கு மாற்றப்படவுள்ளன. மீண்டும் காடுகளுக்குள் தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, பெண் குரங்குகளின் கருப்பையில் சிறிய அளவிலான கருத்தடை வளையங்கள் (Contraceptive Loops) பொருத்தப்படவுள்ளன, இது நவீன மருத்துவ முறையாகும்.

ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு தடுப்பு மையம் நிறுவப்பட திட்டமிடப்பட்டு, நாட்டின் முழுவதும் மொத்தம் 9 மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார்.