முறையான அடையாள பதிவு இல்லாத சிம் அட்டைகள் முடக்கம் – அரசு எச்சரிக்கை



நாட்டில் அடையாள விபரங்கள் முறையாக உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது செயலில் உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேவையான பதிவுத் தகவல்கள் வழங்கப்படாவிடில், அந்த சிம் அட்டைகள் முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்ற உரையின்போது அவர் மேலும் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பின் படி 897,802 சிம் அட்டைகளுக்கு சரியான அடையாள உறுதிப்படுத்தல் இல்லையென சுட்டிக்காட்டினார்.

2019ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சிம் பதிவு கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்து, பதிவு தொடர்பான விதிமுறைகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதே புதிய ஒழுங்குமுறைகளின் பிரதான நோக்கம் என அவர் விளக்கினார்.

இதனிடையே, 245,811 வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் தற்போது செயலில் உள்ளதாகவும், பதிவு செய்யப்படாத சில சிம் அட்டைகள் கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேற்கொள்ள சரியான சந்தாதாரர் தகவல்கள் அவசியம் என தெரிவித்த அமைச்சர், உறுதிப்படுத்தப்பட்ட விபரங்கள் இல்லாத நிலை குற்றங்களுக்கு இடமளிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், முறையான பதிவுத் தகவல்கள் இல்லாத சிம் அட்டைகளைப் பயன்படுத்தி வருபவர்கள் விரைவாக தேவையான அடையாள விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சிம் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் (Deactivation) என்றும் தெரிவித்தார்.