நீதிமன்ற தீர்ப்பால் ஆவேசம்; பொலிஸாரை தாக்கிய பெண் கைது


யாழ்ப்பாணத்தில், தன்னிடம் இருந்த எட்டு வயது குழந்தையை கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் கடும் மனவேதனை அடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி ஒருவரை காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண், பொலிஸ் கடமைகளைத் தடை செய்தல், காயம் விளைவித்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.