பணிஸில் பல்லி எச்சம்: சுகாதாரத் துறையினர் கடும் நடவடிக்கை

 

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஒரு வெதுப்பகத்தில் கடுமையான சுகாதார குறைபாடுகள் நிலவியதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தலைமையில், நகர சபை சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, குறித்த வெதுப்பகம் பல நாட்களாக சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்தமை உறுதி செய்யப்பட்டது.

அனுமதி இன்றி வெதுப்பகம் செயல்பட்டதுடன், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ்கள் இன்றி பணியாற்றியதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததும், சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், எலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதுடன், சில உணவுப் பொருட்களில் பல்லி எச்சங்கள் மற்றும் தூசிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய பல்வேறு சுகாதார குறைபாடுகளை கருத்தில் கொண்டு, குறித்த வெதுப்பகம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கெதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.