வெப்பநிலை அதிகரிப்பு: பெற்றோர்களுக்கு மருத்துவரின் முக்கிய அறிவுறுத்தல்
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது குளிப்பது அவசியம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் தலா சுமார் 20 நிமிடங்கள் குளிப்பது சிறுவர்களின் உடல்நலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தால், நாட்டில் கடுமையான வெப்பநிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிக வெப்பநிலை காரணமாக உடலில் இருந்து அதிகளவு நீரும் உப்பும் வெளியேறுவதால், உடல் சோர்வு மற்றும் ஆபத்தான நிலைகள் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் இது உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடலில் நீர் மற்றும் உப்பு அளவு குறைவதால் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பெரும்பாலும் நீரிழப்பு காரணமாக உருவாகும் ஒரு தீவிரமான நிலை ஆகும்.
இந்நிலையில், பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், மரத்தான் ஓட்டங்கள் மற்றும் புத்தாண்டு விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் பிற திரவங்களை அடிக்கடி அருந்த வேண்டும் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
