விளக்கமறியலில் பலாங்கொடை கஸ்ஸப தேரர்: நீதிமன்றத்தில் சிங்களப் பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இன்று (09) திங்கட்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை, வரும் 11-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அங்கு நின்றிருந்த சிங்களப் பெண் ஒருவர், கஸ்ஸப தேரரை நோக்கி "நீங்களே பௌத்த மதக் கடவுள்" எனக் கத்தி கூச்சலிட்ட சம்பவம் அங்கிருந்தோரை அதிரவைத்தது. இது தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
பின்னணி என்ன? கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலையை நிறுவி, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாகக் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் புகார் அளித்திருந்தது. இந்தச் சட்டவிரோதச் செயல் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
