தேங்காய் எண்ணெய் வரி நீக்கம்: கலப்பட எண்ணெய்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் அபாயம்

 

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வரியை நீக்கும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, சந்தையில் கலப்பட எண்ணெய்கள் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, இந்த வரி நீக்கத்தின் விளைவாக தேங்காய் எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக பாம் எண்ணெய் உள்ளிட்ட உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்குப் பிறகு தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். இதனால் குறைந்த விலையிலான பாம் எண்ணெய் மற்றும் பிற மாற்று எண்ணெய்கள் நுகர்வோரிடையே அதிகப் பயன்பாட்டுக்கு வரக்கூடும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, அதிக வெப்பத்தில் உணவு தயாரிக்க தேங்காய் எண்ணெய் தான் பாதுகாப்பானது என்றும், பாம் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய்களை அதிகமாகப் பயன்படுத்துவது உடல்நல ஆபத்துகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தேங்காய் சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிகளவில் வெளிநாட்டு சந்தையை நோக்கி கவனம் செலுத்துவதால், உள்நாட்டு சந்தைக்கு தேவையான தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்றும், இதன் விளைவாக நுகர்வோர் வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்றும் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.