12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை குறித்து ஆலோசனை


 இலங்கையில் 12 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்கமற்ற செயல்கள் மற்றும் எதிர்மறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்து கவலை தெரிவித்து, இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகப் பயன்பாடு

சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் பல நாடுகள் ஏற்கனவே சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. அந்த நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, இலங்கையிலும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை முழுமையாகத் தடுப்பது மற்றும் சமூக ஊடகங்களில் நுழைவதை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது கலந்தாலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறுவர்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.