மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்து வெளியான அதிவிசேட வர்த்தமானி!
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள், உடனடியாக அமுலுக்கு வருமாறு மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்படுவதாக, பொது முகாமையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் கடந்த 21ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு, விசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண பொது வாழ்க்கையைத் தடையின்றி பேணுவதற்கான அவசியத்தையும், குறித்த சேவைகள் தடைப்படுவதால் அல்லது இடையூறு ஏற்படுவதால் மக்களின் அன்றாட வாழ்விற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு பதிலடியாகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கம், மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இதற்கான விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.