யாழில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை; வியப்பில் பொதுமக்கள்

 


யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகத்தின் திரைநீக்க நினைவுப்பலகையில், தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவுப்பலகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் குறிப்பிடப்படாமல், "பொதுமக்களது நிதியை பயன்படுத்தி... மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பெயரளவில் சிறப்பு இடம் பெறாத போதிலும், தமிழ் மொழியின் முன்னிலையான பயன்பாடு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதிலும், தமிழுக்கு இதுவரை போதிய முன்னுரிமை வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலக நினைவுப்பலகையில் தமிழ் மொழிக்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை, அரசியல் மட்டத்தில் தமிழுக்கு வழங்கப்படும் மொழிமாற்றக் கௌரவத்திற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், யாழில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம், ஜனாதிபதியால் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதியமைச்சர் சுனில் வட்டஹல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம. ஜெகதீஸ்வரன், க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. ரஜீவன் மற்றும் சிவிகே சிவஞானம், அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ. சமிந்த பத்திராஜ, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்,  பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்று (1) விசேட நினைவு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, முக்கிய நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார்.