வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயம்

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், வவுனியா பிரதான ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து யாழ். நோக்கி புறப்பட்டு பயணித்ததின்போதே இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து, வவுனியா – மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பான ரயில் கடவை அருகில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

அப்போது வீதியூடாக பயணித்த பட்டா வாகனம், ரயிலுடன் மோதி தள்ளப்பட்டதில், வாகனத்தில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனம் கடும் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற பாதுகாப்புக் கடவையில் 24 மணி நேரமும் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையாக, அந்தக் கடவையூடாக ரயில் செல்லும் போது பாதுகாப்புக்கதவு மூடப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.  எனினும், இன்று அந்த பாதுகாப்புக் கதவு முறையாக மூடப்படாததனால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட ரயில் அரை மணிநேரத்திற்குப் பின்னரே தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்தது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக வவுனியா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.