எல்லை தாண்டி மீன்பிடி: 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் சென்ற 12 இராமேஸ்வரம் மீனவர்களும், மன்னார் கடற்பரப்பில் மேலும் இரண்டு படகுகளுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்களும் கடற்படையினரால் பிடிபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்கு அருகே கைது செய்யப்பட்ட இந்த 22 தமிழக மீனவர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
